Tuesday, March 20, 2012

ஒரு தவறு செய்தால்! அதை தெரிந்து செய்தால்!






அலட்சியத்தால் செய்யும் தவறுகளை கண்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும்! உதாரணத்துக்கு காலணியை நடுவாசலில் விடுவதாய் ஆகட்டும், விட்ட ஒரு காலணியில் இருந்து சாக்ஸ் துருத்தி கொண்டு தெரிவதாய் ஆகட்டும், மற்றொரு காலணி ஆனந்தசயன அபிநய கோலம் பூண்டு அடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் சேற்றில் கலந்த சூயிங்கம்மின் பிரேதம் அனுதாபத்தை தேடி காற்றில் கண்ணீர் இல்லாமல் அழுவதாய் ஆகட்டும், இப்படி என்னை புலம்ப வைக்க பல ஆகட்டும்கள் இருக்கின்றன.


அலுவலகத்திலும் அலட்சியம் மற்றும் அதனால் ஏற்படும் தவறுகளைக் காணும் போது தூணைப் பிளந்து கொண்டு வந்த நரசிம்மரின் ஆற்றல் ஒரு நொடியாவது வராதா என ஏங்கியது உண்டு. ஆனாலும் அப்ரைசல் அருள் அளிக்கும் சரபர் ஆகிய மேலாளரைக் கண்டு சாந்தமாக போவது போல நவீன நரசிம்மன் சாந்தமும் அடைந்துவிடுவேன்.


அன்று மாலை 05:30 மணிக்கு வர வேண்டிய மகிழ்வுந்து 06:00 மணிக்கு வந்து சேர்ந்தது. அலுவலகத்துக்கு தொலைபேசியில் அழைத்து கொதித்தெழுந்ததில் ”சாரி சார். தெரியாம ஒரு ரூட்டுக்கு ரெண்டு வண்டி அனுப்பிட்டோம். அதுல ஒரு குழப்பம் ஆயிடுச்சு” என்று சமாளித்தார்கள். அது எப்படி ஒரு நாட்டுக்கு இரு பிரதமர்கள் சாத்தியம் என்ற எண்ணிய போது நான் இருப்பது இந்தியா என சிறுமூளை பெருமூளையை சமாதானம் செய்தது. 


மூளைகளின் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த போது கண் வழியாக ஒரு செய்தி மூளையை அடைந்தது. மூளை அதைக் கண்டு துடித்து வாயைத் திறக்க சொல்லி கட்டளை இட்ட பின் வார்த்தைகளை தன் அணுக்களில் தேடிக்கொண்டிருந்தது.  


”அண்ணா! சீட் பெல்ட் போட்டுட்டு வண்டி ஓட்டுங்க”


“ஏன் பாஸ் அதெல்லாம்! இந்த டிராபிக்ல நான் ஏன் நாப்பதுக்கு மேல போப்போறன்?”


“இப்போ நீங்க பெல்டை போடுரிங்களா? இல்ல cab deskக்கு கால் பண்ணவா?”


என்னை கொக்காக முறைத்து கொண்டே அந்த கொங்கணவன் இம்முறை சீட் பெல்டுக்கும் இருக்கைக்கும் இடையே உள்ளே இடைவெளியில் நுழைந்து அமர்ந்தார்.


மகிழ்வுந்தை விட்டு இறங்கும் போதே மகிழ்ச்சி உந்து சக்தி இன்றி இருந்தது. காரணம்: திங்கள் மாலை.


மறுபடியும் மூளையின் ஒரு மூலையில் ஒரு சிகப்பு கொடி ஏற்றப்பட்டது. நுழைவு வாயிலில் இருந்த பூச்செடியின் பூக்கள் எல்லாம் பூத்திருந்தாலும் அதற்கு உணவு சமைத்துக் கொண்டிருக்கும் அடுப்பங்கரையான இலைகள் சில இடிந்து போய் சருகுகளாக கீழே கிடந்தன. இதைக் கூட சுத்தப்படுத்தாமல் என்ன தான் செய்கிறார்களோ தெரியவில்லை.


ஆறாவது தளத்தில் தான் நான் எண்களுடன் போர் செய்யும் போர்களம். இருந்தாலும் எனது பசிப் போருக்கு முடிவுகட்ட மின்தூக்கியில் 2 என்ற எண்ணை விரலின் நுனியால் தொட்ட போது ஆரஞ்சு நிறத்தில் 2 ஒளிர்ந்தது.


தமிழன் என்ற திமிர் உள்ளதால் ஆரிய உணவான சப்பாத்தியை தவிர்த்து தோசையை வரச் சொல்லி உத்தரவிட்டது 83F643645 எண் கொண்ட 20 ரூபாய் தாள்.


“இன்னும் 5 ரூபாய் வேணும்” - கடைக்காரர்


”எதுக்கு?” – தமிழன் திமிர் உடைய நான்


”இன்னிலேந்து விலை ஏத்திட்டோம்” – கடைக்காரர்


“அப்போ சப்பாத்தியே கொடுங்க” – தமிழின துரோகியாகிய நான்


நாற்காலியில் அமர்ந்து மேஜையில் தட்டை வைத்த போது தான் கவனித்தேன். பசிப்போரை ஏற்கனவே அந்த போர்க்கள மேசையில் யாரோ நடத்தியிருந்தார்கள். போரால் மரித்திருந்த காகித தட்டுகள், உருளைக் கிழங்கு வறுவலின் பழைய வீடு, பழச்சாற்றை பத்து நிமிடங்கள் வரை தழுவியிருந்த காகித குடுவை என போரின் சகல சாட்சிகளும் அங்கே கிடந்தன.


“கொஞ்சம் இந்த டேபிளை சுத்தப்படுத்த சொல்லுங்க”. நான்


“என்ன சார்! நீங்க ஒருத்தர் தானே அவ்வளவு பெரிய டேபிளில் இந்த மூலை சுத்தமாத்தான் இருக்கு. இங்க உக்காந்து சாப்பிட்டலாம் இல்ல” Canteen supervisor


“இதை சொல்லத்தான் facilities managementனு ஒரு team வைச்சிருக்காங்களா? உங்க பேர் என்ன சொல்லுங்க நான் facilities team கிட்ட பேசிக்கிறேன்.”


”என்ன சார் இதப் போய் பெரிசுபடுத்திட்டு. இன்னிக்கு திடீர்னு ரெண்டு பேர் லீவு போட்டுட்டாங்க. ஒருத்தர் தான் நைட்டு எட்டு மணி வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”


“அதெல்லாம் எனக்கு தெரியாது, க்ளீனா இல்லாத டேபிளில் நான் சாப்பிடமாட்டேன்”


இந்த கொங்கணவன் ஒரு வழியாக அந்த ஒருவரை கண்டுபிடித்து உடனடியாக போர்களத்தை சுத்தப்படுத்துவித்தார். என் போரும் முடிந்தது.
இரண்டாம் தளத்தில் இருந்து மூன்றாம் தளத்தை நான்காம் தளத்தை அடைந்தேன். அங்கு வழக்கமாக இருக்கும் fire extinguisher காணவில்லை என்று கவனித்தன என் கண்கள். ஐந்தாம் தளத்தில் நின்றன என் கால்கள். 
இம்முறை Emergency response teamஇன் முன்னால் போய் நின்றேன்.


“I don’t find any fire extinguisher in 4th floor staircase. May I know the reason?”
”சார்! நேத்து தான் validity date முடிஞ்சு எல்லாத்தையும் reservice செஞ்சு மாட்டிட்டு இருக்கோம்”


“அப்போ இன்னிக்கு தீ விபத்து நடந்தா நாலாவது மாடியில இருக்கரவங்களுக்கு எல்லாம் ஒன்னும் ஆகாதா?”


”ஏன் சார் அபசகுனமா பேசுரிங்க?”


“அப்போ எல்லா மாடியிலையும் fire extinguisher மாட்டி வைத்திருப்பது அபசகுனமா?”


”சார் ரெண்டு யூனிட் மட்டும் குறையுது. இன்னும் அரை மணி நேரத்தில் வரவைச்சு மாட்டிடுறேன்.”


ஆறாவது தளத்தில் இருக்கும் எனது பெயர் பதிக்கப்பட்டிருந்த மேஜையின் எதிரில் இருந்த சக்கரக்காலியில் அமர்ந்தேன்.
மடிக்கணியைத் திறந்த போது மணி ஏழு என்றது. மின்னஞ்சல்கள் எல்லாம் பார்த்து முடித்த பின் இன்று செய்ய வேண்டிய to do list எடுத்தேன். மணி நேரப்படி எந்த ரிப்போர்ட்டுகள் எந்த நேரத்தில் செல்ல வேண்டுமென்று மிகச் சரியாக அதில் பதியப்பட்டிருந்தது.


மூன்று மணி நேரம், இருபது நிமிடங்களின் முடிவில் நேரம் 10:21 என்று நேரம் சொல்லிற்று. To do list இல் ஒன்றை தவிர அனைத்து வரிகளுக்கும் நேராக முடிந்ததற்கு அடையாளமான ஒரு டிக் மார்க் இருந்தது.
இரவு உணவு உண்ண இரண்டாம் தளம் செல்ல நேர்கையில் நான்காம் தளத்தைக் கடந்த போது சிகப்பு நிற சிலிண்டர் தொங்கிக் கொண்டிருந்ததால், ஐந்தாம் தளத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மூன்றாம் தளம் வழியாக இரண்டாம் தளத்தை அடைந்தேன். 


உணவை உண்டேன். மீண்டும் ஆறாம் தளத்தை அடைந்தேன்.
மீதி இருக்கும் அந்த ரிப்போர்ட்டையும் தயாரிக்க தொடங்கினேன். எல்லாம் இனிதே முடிந்தது என நினைத்த நேரத்தில் excelஇல் இருந்த ஒரு வரி அந்த எண்ணத்தை சர்ர்ர்ர்ர்ர் என பிரேக் அடித்து நிறுத்தியது.
$10,345 என்ற எண்கள்! அழகிய தமிழ்மகன் விஜய்களை பார்த்தது போல் சிகையலங்காரம் முதல் விரல் நகம் வரை ஒரே மாதிரி இரண்டு எண்கள், அதே line description! எதிலுமே மாற்றம் இல்லை!


பார்த்தவுடன் தெரிந்துவிட்டது அது double act அல்ல duplicate என்று.


எனக்குள் இருந்த கொங்கணவன் விழித்து கொண்டான்.


கொக்கு தான் யாராக இருக்கும் எனத் தெரியவில்லை.


“என்னாச்சுடா மானிட்டரை இப்படி முறைக்கிற?” அண்டை நாற்காலியில் அமர்ந்திருந்த மயிலின் குரல் காதுகளை அடைந்த போது நாவின் சுவை மொட்டுகள் காதுக்கு சென்று அந்த மயிலின் சுவை இனிப்பு என உறுதி செய்திற்று.


”யாரோ ஒருத்தன் என் லெட்ஜர்ல ஒரு accrual போட்டு இருக்கான்.”
”அதுக்கென்ன?”


”நான் ஏற்கனவே revenue book பண்ணிட்டேன். ஆனாலும் accrual போட்டிருக்கான்”


”விடு! அதான் books close ஆகலை இல்ல reverse பண்ணிக்கலாம்.”


”இந்த அலட்சியம் தான் எல்லா தப்புக்கும் முழு காரணம், இதே நான் பார்க்காம விட்டிருந்தா, ஒரு நாள் லேட்டா ரிப்போர்ட்டை பார்த்திருந்தால் ரெவின்யூ டபுள் ஆகியிருக்கும், forecastஇல் varianceனு கிளையின்ட் கத்துவான். யாருனு பார்த்து escalate பண்ணாதான் சரி வரும்.”


“என்னவோ பண்ணு. ஒரு மணிக்கு மீட்டிங் இருக்கு, போன மீட்டிங் மாதிரி கடுக்கா கொடுத்துடாத. மேனஜர் உன்னைத் தான் அன்னிக்கு கேட்டாரு/”


“ஆமாம் போ! பெரிய மீட்டிங். இந்த entryஐ reverse பண்ணிட்டு. reportஐ அனுப்பிட்டு வரேன்.”


முதல் $10,345ஐ இரண்டு முறை கிளிக்கிய போது பதிந்த idக்கான எண்: R189236 என்றது.


இரண்டாம் $10,345ஐ இரண்டு முறை கிளிக்கிய போது பதிந்த idக்கான எண்: R189236 என்றது.


“என்னடா ரிப்போர்ட் ரெடியா? வா மீட்டிங்க்கு போகலாம்.” மறுபடியும் அதே சுவை. அதே இனிப்பு.


“உம்ம்! அனுப்பிட்டேன்”


”யாரு இன்னொரு entry போட்டிருந்தா? Escalate பண்ணிட்டியா?”


”விடு! சின்ன தப்புதானே! பாத்துக்கலாம். இந்த earring உன் காதுல அழகா பொருந்தியிருக்கு.”